Wednesday, 11 November 2020
Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை : TAMIL KEY BOARD LAYOUT | VANAVIL KEY BOARD LAYOUT ...
Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை : கல்லூரிகளை திறக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைக...
கல்லூரிகளை திறக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை
கல்லூரிகளை திறக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது.
முக கவசம் கட்டாயம்
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும்போது என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?, அங்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நேற்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகங்களில் ஒவ்வொருவரும் 6 அடி சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். அவ்வப்போது சோப்பு கொண்டு கைகளை கழுவவேண்டும்.
* கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் ‘ஆரோக்கிய சேது’ அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும்.
* மத்திய-மாநில அரசுகளால் பாதுகாப்பானது என்ற அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளை மட்டுமே திறக்க வேண்டும். அந்த கல்லூரிகளில் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்ற வேண்டியது அவசியம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள், பேராசிரியர்களை கல்லூரிகளுக்குள் வர அனுமதிக்கக் கூடாது.
சுழற்சி முறையில் வகுப்புகள்
* வகுப்பறைகளுக்கு வரத்தேவையில்லை என்று சில மாணவர்கள் முடிவு எடுக்கக்கூடும். அவர்கள் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் கல்வி கற்பதை தேர்வுசெய்யலாம். கல்வி நிறுவனங்கள் அதற்கான ஏற்பாடுகளை ஆன்லைன் மூலம் அளிக்க வேண்டும். மேலும் கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றுக்கு ஆன்லைன் மூலம் பெறக்கூடிய வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
* கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டு இருக்கவேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தும் வசதிகளில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு, சுகாதாரம், உணவு, நீர் போன்றவற்றை முறையாக ஏற்பாடு செய்யவேண்டும்.
* சமூக இடைவெளி பின்பற்றமுடியாத கல்லூரி வளாகங்களில் எந்த திட்டங்களையும் செயல்படுத்த வேண்டாம்.
* கல்லூரி கால அட்டவணையாக 6 நாட்கள் என்பதை பின்பற்றலாம். சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வகுப்பு அறைகளில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். வகுப்பு அறைகள் மற்றும் கற்றல் தளங்களில் இடம் இருப்பதை பொறுத்து, 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம். ஆன்லைன் கற்றல்-கற்பித்தல் நடைமுறைகளுக்கு பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
அனுமதிக்க வேண்டாம்
* கல்லூரிகளில் பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும். அதேபோல், கல்லூரிகளின் அனைத்து நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளில் தெர்மல்ஸ்கேனர் கருவி, கிருமிநாசினி திரவம், முக கவசம் வைக்கப்பட்டு இருக்க வேண்டும். காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டாம்.
* கல்லூரி வளாகத்தில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றமாக இருக்கவேண்டும். நீச்சல்குளம் மூடப்பட்டு இருக்கவேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கும், வயதுமுதிர்ந்த, கர்ப்பிணி பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களை முன்களப்பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்.
* கல்லூரி விடுதிகளில் அறைகளை பகிரக்கூடாது. அறிகுறி இருக்கும் மாணவர்களை எந்த சூழ்நிலையிலும் விடுதிகளில் தங்க அனுமதிக்கக்கூடாது.
ஊக்கப்படுத்தக்கூடாது
* ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியத்தை தவறாமல் கண்காணிக்க வேண்டும். புத்தகங்கள், பிற கற்றல் பொருட்கள் மற்றும் சாப்பிடக்கூடிய பொருட்களை பகிர்வதை ஊக்கப்படுத்தக்கூடாது.
* மாநில சுகாதாரத்துறை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும். பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான நிலைகளை பராமரிக்க வளாகங்கள் தயாராக இருக்கிறதா? என்பதை சுகாதாரத்துறை உறுதிசெய்ய வேண்டும்.
* உடல்நிலை சரியில்லாமல் மாணவர்கள் இருந்தால், அவர்களை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.